நல்ல உள்ளம் படைத்த அரசன் ஒருவன் காங்கேய நாட்டை ஆண்டு வந்தான் நாட்டு மக்களை உயிராக நேசித்த அவர் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்ததில்லை. தினமும் தனது கையால் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தார். அரசனின் கருணையை நினைத்து எல்லா மக்களும் பெருமையாக பேசினார்கள்.
ஒரு நாள் அன்னதானம் செய்யப்போகும் சமயத்தில் வானில் ஒரு கருடன் பாம்பொன்றைத் தூக்கிக்கொண்டு சென்றது. கருடனிடமிருந்து தப்பிக்கும் வமுயற்சி யில் பாம்பின் வாயிலிருந்து விசமானது அரசரின் உணவுப் பாத்திரத்தில் விழுந்தது. இதை அறியாத அரசர் அவ் உணவை அந்தணருக்குக் கொடுத்தார்.
“மிக்க நன்றி மன்னா! உனது நல்லாட்சி என்றும் நிலைத்திருக்கட்டும்! என வாழ்த்திச் சென்றன அந்தனர்கள் அவ்வுணவை அருந்தியவுடன் மயங்கி கீழே விழுந்து இறந்தார். இச் செய்தி அரசனுக்குக் கிட்டியது.
அரசன் மனம் வருந்தினான். தன் கவனக்குறைவை எண்ணி கவலையுறான். தான் செய்த இப்பாவத்தை எப்படித் தீர்ப்பது என்று கலங்கினான். இதை எல்லாம் கண்ணுற்ற தர்ம தேவதை மனம் வருந்தினார். அறியாமல் செய்த பிழைக்கு அனுபவிக்கிறானே என எண்ணியவாறு மக்களின் மனதை அறிய காத்திருந்தார்.
நாட்கள் கழிந்தன. ஒரு நாள் வெளிநாட்டில் இருந்து அந்தணர்கள் நால்வர் அரசனிடம் தானம் பெற வந்தனர்.. அப்பெரிய ஊரில் அரண்மனை இருக்குமிடம் தெரியவில்லை. எவ்வாறு கண்டுபிடிப்பது? என சிந்திக்கையில் ஒரு மூதாட்டியைக் கண்டனர். பாட்டி நாங்கள் வெளிநாட்டில் இருந்து அரசனிடம் தானம் பெற வந்திருக்கின்றோம். அரண்மனைக்கு எந்த வழியில் செல்ல வேண்டும்? . என்று கேட்டனர்.
இதைக் கேட்ட பாட்டி அரசனிடமா தானம் பெறப்போகிறீர்கள்? உங்களுக்கு உயிர் வாழ ஆசையில்லையா?.என்று கேட்டார். மன்னரின் தானத்தை பெற்றவர் இறந்து விடுவார். பிறகு உங்கள் விருப்பம் என்றார்.
இச்செய்தியைக் கேட்ட நால்வரும் அதிர்ச்சி அடைந்து தானம் வேண்டாம் என்றபடி வீடு திரும்பினர். அரசைப் பற்றி பொய் சொன்ன பாட்டிக்கு இப்பாவம் போய் சேரட்டும் என்று தர்ம தேவதை கூறியது.
சற்று நாட்களின் பின் அரசன் மனச்சஞ்சலங்களிலிருந்து விடுதலை அடைந்து பழையபடி தான தர்மங்கள் செய்யத் தொடங்கினான். அந்தப் பாட்டியோ இனம் தெரியாத மனக்கவலையில் ஆழ்ந்து அவதியுற ஆரம்பித்தாள்.
நீதி :- ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் போக விட்டு புறம் சொல்லித் திரிய வேண்டாம்.