பெற்றவர்கள் இவருக்கு சூடிய பெயர் சேவியர் ஆகும். தமிழ் மீது கொண்ட அடங்காப்பற்றினால் தனது பெயரை தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார்.
ஊர்காவற்றுறை தூய அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் யாழ்ப்பாணம் தூயபத்திரிசியார் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றார்.
இறையியல் பல்கலைக் கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார். உரோமப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிநாயகம் அடிகளார் தமிழ்,எபிரேய மொழிகளோடு ஐரோப்பிய மொழிகள் பதினெட்டிலும் புலமை பெற்று விளங்கினார்.
பன்மொழிப்புலமையோடு தொல்பொருளியல், வரலாறு முதலிய இயல்களையும் துறைபோகக் கற்றுத் தேறினார்.
தவத்திரு தனிநாயகம் அடிகளார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற்குச் சென்று தமிழின் பெருமை பற்றிப் பேசியுள்ளார். தமிழின் தொன்மை, இலக்கியவளம் என்பன பற்றி அவர் பல்வேறு பல்கலைக்கழகங்களின் மேலாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.
தமிழைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என அவர் வேண்டுகை விடுத்தார். சமஸ்கிருதம் போன்ற உயர் நிலை தமிழுக்கு இல்லையென்று சில பல்கலைக்கழகங்கள் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டன.
இருப்பினும் இங்கிலாந்து, ருசியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையைத் தொடங்கின. இந்திய மொழிகள் என்ற தலைப்பின் கீழ் மாத்திரம் அவை கற்பித்தலைத் தொடங்கின. தமிழைத் தனியாக வளர்க்க அவர்கள் முன்வரவில்லை.
ஆனால் தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனியாக தனித்துவமாக புதுவேகத்துடன் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடிகளாரின் கடின உழைப்புக்கான பலனை இன்று நாம் சுவைக்கிறோம்.🙏
அதற்காக 50 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. இதே போல எமது நேற்றைய இன்றைய உழைப்புக்குரிய அறுவடைக்கு நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் காத்திருப்போம்.⚓