நாய் – பூனை – எலி

581

ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால எல்லா வளர்ப்பு பிராணிகளும் ஒண்ணுமண்ணா, ஃபிரண்ட்ஸா இருந்திச்சாம்.

அப்பல்லாம் பூனையும் நாயும் ஒண்ணா விளையாடுமாம். எலிகள் பயமே இல்லாம பூனைகளோட கதை பேசுமாம்..

ஒரு முறை நாய்க்கும் பூனைக்கும் ஒரு யோசனை வந்துச்சாம். நாம எல்லோரும் எல்லா வேலையும் செய்யவேணாம். வீட்டுக்கு வெளிய இருக்கற வேலையை நாயும், வீட்டுக்கு உள்ள இருக்கற வேலையை பூனையும் செய்யலாம்னு முடிவு பண்ணிச்சாம்.

எதுக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்னு சொல்லி ஒரு பத்திரத்தில எல்லாம் எழுதி இரண்டு பேரும் கையெழுத்து போட்டதாம்.

பத்திரத்தை எங்க பத்திரமா வக்கறதுன்னு ரொம்ப நேரம் யோசனை பண்ணிச்சதுகளாம். அப்பதான் பேங்க் லாக்கர் எல்லாம் கிடையாதே.. சரி எலி கிட்ட கொடுத்து வீட்டுப் பரண்மேல இருக்கிற பொட்டியில வைக்கச் சொல்லுவோம்னு சொல்லிக் குடுத்து வச்சதாம்.

நாய் பூனை எலி மூணும் பத்திரத்தைப் பத்தி மறந்தே போச்சாம். ஒரு நாள் அந்த வீட்டுக்காரம்மா, பரணைச் சுத்தம் பண்ணினப்ப என்னடா இது குப்பை கிடக்குது அப்படின்னு அந்த ஒப்பந்தப் பத்திரத்தை அடுப்பில போட்டு எரிச்சுட்டதாம்.

கொஞ்ச நாள் ஆனதும் நாய்க்கு கோவம் கோவமா வந்ததாம். பின்ன வெய்யிலிலும் மழையிலும் காட்டிலும் மேட்டிலும் து அலைய வேண்டியதா இருந்தது. சாப்பாடு சரியில்லை. ஆனா பூனை வீட்டுக்குள்ளயே சந்தோஷமா இருந்துகிட்டு சந்தோசமா இருக்கேன்னு கோபம்.

நாய் பூனை கிட்ட வந்து இனிமே நான் வெளி வேலைக்கு போமாட்டேன் நீதான் போகணும்னு அடம் பிடிச்சதாம். பூனை அதெல்லாம் கிடையாது. நாம அக்ரிமெண்ட் போட்டு பத்திரம் எழுதி இருக்கோம். அதுப்படி நீ நடந்துக்கத் தான் வேணும் என்று சொன்னதாம்.

நீ என்ன ஏமாத்துற.. அக்ரிமெண்ட்ல அப்படி ஒண்ணும் எழுதலை என நாய் சத்தம் போட்டுச்சாம்.. இரு இரு அக்ரிமெண்டைக் கொண்டு வந்து காட்டறேன் அப்படின்னு சொல்லிட்டு பூனை பரண் மேல போய் சுண்டெலியைப் பாத்து ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு அக்ரிமெண்ட் உங்கிட்ட குடுத்தனே அதைக் குடுன்னு கேட்டதாம். சுண்டெலி தலையைச் சொறிஞ்சிகிட்டே அங்கயும் இங்கயும் தேடிச்சாம்.

கடைசி வரை அக்ரிமெண்ட் கிடைக்கலன்னு தெரிஞ்சவுடன் பூனை எலியைத் தொரத்தி தொரத்தி கடிச்சதாம்..

பூனையை நாய் பாக்கறப்ப எல்லாம் எங்க அந்த அக்ரிமெண்ட் அப்படின்னு கோபமா விரட்டிக் குலைக்குமாம்.

பூனை எலியைப் பாக்கறப்ப எல்லாம் அக்ரிமெண்டை எங்க அப்படின்னு கேட்டுக் கேட்டுக் கடிக்குமாம்.

எலியோ ஊர்ல இருக்கற எல்லாப் பேப்பரையும் அது அக்ரிமெண்டா அப்படின்னு படிச்சுப் பார்த்து ஏமாந்து கோபத்தில கொறிச்சு போட்டுடுமாம்.

இன்னும் அக்ரிமெண்ட் கிடைக்கலயாம். அதனால சுட்டீஸ், உங்க புத்தகம் நோட்டு எல்லாத்தையும் பத்திரமா எலி வராத மாதிரி வைங்க என்ன…