வயவையிலிருந்து கண்டாவளைக்கு..

143

ஏறு தழுவதலில் எம்.ராஜா காளை வாகை சூடியதென்ற செய்தியைப் படித்ததும் சிரிப்பு வந்தது. ராஜாவின் காளையென எழுதுவதைத் தவிர்த்து விட்டு ராஜா காளை எனும் பொருள்படும்படி எழுதியதைக் குறும்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆழ்மன அழுக்கின் வடிவமாகவே காணக்கூடியதாக உள்ளது.

சொல்வேந்தர் சுகி,சிவம் அவர்களின் தைத்திருநாள் சிறப்புப் பட்டி மன்றத்தைக் காண நேர்ந்தது. உழவுக்கு அடிப்படை என்பதால் கதிரவனுக்கு பொங்கல் செய்கின்றோம் என்ற கருத்தை சற்றே ஆழமாக ஆய்ந்திருந்தார், அந்தப் பட்டி மன்றத்தில்.

உலகுக்கு அடிப்படையான பூமி(தை), அதன் சுழற்சிக்கு ஆதாரமான சூரியன் இரண்டுக்கும் மட்டும் அல்லாமல் இயற்கைக்கு எடுக்கும் விழாவாக தைத்திருநாளை வருணித்திருந்தார். உலக நாடுகளில் அறுவடை முடிந்த பின் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாக பொங்கலைக் ஒப்பிட்டார்.

அவருடைய பிறப்பை வைத்து அவருடைய கருத்தை திரிப்பதைத் தவிர்த்து விட்டு நோக்கின், இயற்கை வழிபாட்டின் உச்சமாக தைத்திருநாளைக் கொள்ளலாம். அந்நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகத் தெரிவு செய்ததில் மகிழவும் செய்யலாம்.

உழவுக்கு உதவிய காளைக்கு விழா எடுக்கும் நாள் இன்று. ஆம்.. பட்டிப்பொங்கல்.. இந்நாளில் வயவையூரிலிருந்து கண்டாவளைக்குப் பொடி நடையாக பட்டி கொண்டு போவது எங்கள் நெஞ்சங்களில் நிச்சயம் நினைவாடும்.

அந்நினைவுகளோடு அனைவருக்கும் பட்டிப்பொங்கல் வாழ்த்துகள்.