நம்பிக்கையும் செயலும்.

ஊருலா முடித்து அரண்மனை வந்த மன்னன் தன் காவலாளி குளிரில் பணிபுரிவதைக் கண்டான். மனதில் கவலையுடன் “உனக்குக் குளிரவில்லையா” என விசாரித்தான்.

காவலாளியோ “குளிர்கிறதுதான்.. ஆனால் பழகி விட்டது” என்றான். ஆனாலும் மன்னனின் இரக்க குணம் அமைதியடையவில்லை. “இன்னும் சற்று நேரத்தில் உனக்கு குளிர்தாங்கும் அங்கி அனுப்புகிறேன்” எனச் சொல்லிச் சென்றான்.

அரண்மனை புகுந்ததும் அமைச்சரை அழைத்து காவலனுக்கு கம்பளி வழங்க ஆணையிட்டான். அமைச்சனோ வேறு பணிப்பளுவில் கம்பளி வழங்குவதை மறந்து விட்டான்.

காலையில் எழுந்து வந்த மன்னன் காவலாளியைத் தேடினான். குளிர் தாக்கியதில் அவன் படுக்கையில் விழுந்ததை அறிந்து காவலாளி வீட்டுக்குச் சென்றான்.

காவலாளிக்குக் கம்பளி வழங்கப்படாததை அறிந்து கவலையுற்றான். தன் வருத்தத்தையும் மன்னிப்பையும் காவலாளியிடம் தெரிவித்த மன்னன் “இன்று மட்டும் எப்படி உன்னை குளிர் தாக்கியது” என்றான்.

“குளிரங்கி வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு வந்தவுடன் குளிரை உணரத் தொடங்கினேன் மன்னா.. குளிரை உணரத் தொடங்கியதும் கம்பளி வரும் என்ற நம்பிக்கையுடன், கம்பளிக்காகக் காத்திருந்ததால் குளிரை தாங்கும் என் உறுதி குலைந்தது. குளிர் என்னைத் தாக்கியது” என்றான்..

ஆம்.. நாம் கொடுக்கும் வாக்கை நிறைவேற்றத் தவறுவோமேயானால், அது இன்னொருவரை அழித்து விடவும் கூடும்.. எனவே.. செய்கின்றோம் என்ற நம்பிக்கியைக்  கொடுப்பதை விட செய்ய வேண்டியதைச் செய்வதே மிகவும் சிறந்தது..