கவிமகனின் பகிரப்படாத பக்கங்கள் – நூல் வெளியீடு

343

மன்னாரைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரின் கவிதைத் தொகுப்பு நூலை அண்மையில் காண நேர்ந்தது. கவி நடை சற்றுக் குறைவாக இருந்தாலும் உண்மைக்கு மிக நெருக்கமான அவரது மனப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டு நிறைவான நூலாக முகம் காட்டி நின்றது அந்நூல். அந்நூல் வரிசையில் மலர இருக்கும் இன்னொரு மலர் “கவிமகனின் பகிரப்படாத பக்கங்கள்”

தமிழனிடம் ஆவணப்படுத்தும் குணம் அறவே இல்லை என்று சொல்வோர் கூட தமிழனின் ஆவணங்கள் அழிக்கப்பட்டதையும் சிதைக்கப்பட்டதையும் திரிபுபடுத்தப்பட்டரையும் புதைக்கப்பட்டதையும் புதைக்கப்பட்டவை முளைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படும் கீழடி வேலைகளையும் மறுப்பதில்லை.

அவை எதையும் தடையாகக் கொள்ளாது முள்ளிவாய்க்காலின் முன், பின்    காலங்களையும் பதிவு செய்யும் மாபெரும் பணி பலராலும் தொடரப்பட்டு வருவது மகிழ்வைத் தந்தாலும் அவைகூட காணாமல் ஆக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்க அச்சம் மிகாமல் இல்லை..

அதற்கான மாற்று வழிகளை தேடுவதோடு, மனப் புத்தகத்தில் கனந்து கிடக்கும் பகிரப்படாத பக்கங்களை பகிரும் கவி மகனின் பயணத்தில் நாமும் இணைய வேண்டியது தட்டிக் கழிக்க முடியாத ஒன்றென்பதையும் கருத்தில் கொண்டு, அவரின் பகிரப்படாத பக்கங்களை பகிரங்கப்படுத்த நேர் கொண்டு நிற்போம் வாருங்கள்.