தமிழீழத்தின் தலை சிறந்த பாடகர் மேஜர் சிட்டு ஒரு பன்முகத் திறனாளர்

“கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்

உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்

மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்

கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே

எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது…”

இந்தப் பாடலை எங்கள் இசைப்புலி பாடும் போது இரண்டாவது வரி தொடங்கும் போதே கண்வழி கங்கைகள் பாயத்தொடங்கிவிடும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது பாடகர் சிட்டுவின் குரலில் தமிழ் மண்ணின் அவ்வளவு வேதனையும் ஆழப்பதிந்து இருக்கும்.

இரண்டாவது போராளிகளின் உள்ளம் அத்தனை மென்மையானது. சமூகத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டு சகித்து வாழக்கூடியவன் அந்தச் சமூகத்தில் தொடர்ந்தும் தன்னை இணைத்து வாழத் தெரிந்தவனாக இருக்கிறான். பொறுத்துக் கொண்டு வாழமுடியாதவனே போராளி ஆகிறான்.

மேனாட்டு மொழிகளில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் குருதிச் சுவடுகளும்(வரலாறு) அதையே இந்தச் சுயநலம் மிக்க உலகின் காதில் சொல்லப் போகிறது.

“கடும் பயிற்சி இலகு சண்டை” என்ற தலைவரின் போரியல் பொன் மொழிக்கு அமையவே போராளிகளின் பயிற்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டவை.

தலைவரின் வார்ப்பில் உருவாகும் போராளிகள் பயிற்சிகளின் போது அடையும் உபாதைகளும் வேதனைகளும் சொல்லில் வடிக்கமுடியாதவை.

உப்பு விளையும் கடற்கரைகளிலும் கிறவல் மேடுகளிலும் விழுந்தும்,எழுந்தும்,பாய்ந்தும்,குதித்தும்,தவழ்ந்தும் கடுமையான பயிற்சியில் ஈடுபடும் போது உரசல் காயங்களில் படும் உப்பு நீரினால் ஏற்படும் வலியை தீர்க்கும் நிவாரணியாக இந்தப்பாடல்கள் அமைந்திருக்கும் என தென் தமிழீழத்தின் ஜெயந்தன் படையணிப் போராளிகள் கூறுவர்.

போராளி என்பவர்கள் எப்போதுமே பல்துறை வித்தகர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களின் கூட்டுவடிவமே போராளிகள். யாழ் வடமராட்சி கிழக்கின் அவதாரம் எடுத்து “தமிழர்தாயகத்தின் இதயபூமி”எனச் சொல்லப்படும் மணலாறு மண்ணில் அடந்த அடவியில் புயலோடு போராடும் ஓர் புலியாகப் புடம் போடப்பட்டவர்தான் பாடகர் சிட்டு அவர்கள்.

தமிழீழத்தின் தலை சிறந்த பாடகராக விளங்கிய சிட்டு அவர்களும் பல திறமைகளின் சொந்தக்காரன்.

நல்ல திட்டமிடலும், திட்டமிட்டதை நடை முறைபடுத்தும் மிக்க சாதுரியம் கொண்டவர் மேஜர் சிட்டு.

ஆளணி முகாமைத்துவம் என்பது நன்கு தெரிந்த தலைமைப் பண்பும் நிறையப் பெற்றவர்.

வீரச்சாவு அடைவதற்கு சில நாட்கள் முன்னர் புளியங்குளப் பகுதியில் ஓர் பலமான பிரதான மருத்துவநிலை அமைத்துத் தந்துவிட்டு சென்றார்.

உயிர்காப்புச் செயற்பாடுகளுக்கு பக்கபலமாய் இருந்த அந்த மருத்துவ நிலை மேஜர் கஜேந்திரனின்(அருண்மொழிவர்மன்) பெயரைத் தாங்கியிருந்தது.

பிரிகேடியர் தீபன் அவர்களின் தலைமையில் புளியங்குளம் சந்தியில் அமைந்திருந்த தமிழர்சேனையின் பலம் வாய்ந்த தளத்திற்குப் பின்னே அந்த மருத்துவ நிலை அன்று அமைந்திருந்தது.

“ஜெயசிக்குறுய்” அல்லது “Victory Assured” அல்லது “உண்மை வெற்றி” என அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை உலகிலேயே மிக நீண்ட இராணுவ நடவடிக்கைகளில்
ஒன்று எனச் சொல்லப்படுகிறது.

சிங்களத்தின் படை நடவடிக்கையில் விழுப்புண் தாங்கிய பல வீரர்களின் மீளவுயிர்ப்பித்தல் (Resuscitation), குருதி ஏற்றுதல்(Blood Transfusions) போன்ற பல அத்தியாவசிய மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக மேஜர்_சிட்டு அவர்களால் நன்கு திட்டமிட்டு பாரிய விமானத்தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய முறையில் அந்தப் பிரதான மருத்துவ நிலை அமைக்கப்பட்டது.

அங்கு முதலில் கடமையில் இருந்த உதவி மருத்துவர் மருதன், மருத்துவ நிர்வாக பொறுப்பாக சேவையிலிருந்த திருமிகு அற்புதன், கிரி, கோணமலை மற்றும் மருத்துவர்களான Dr இ.அருள், Dr இ.அமுதன், Dr கு.சத்தியா ஆகியோர் நன்றிப்பெருக்குடன் மேஜர் சிட்டு அவர்களை நினைவு கூருவார்கள்.

சிட்டு எனும் பெரும் பொத்தகத்தின் ஒரு பக்கத்தையே இங்கு பதிவு செய்து உள்ளேன். எனினும் விரிவான பதிவை பின்னர் தர எண்ணியுள்ளேன்.

காலங்கள் சட்டெனக் கரைந்தாலும் எமை
விட்டு விலக மாட்டாய்
சிட்டு அண்ணா…

-வீரவணக்கம்-