கடன்பட்டார் நெஞ்சம்

467
  • BIGGBOGG – நிகழ்வில் கடந்த சனிக்கிழமை பிடிக்கும், பிடிக்காது விளையாட்டு. ஒரு பெண் வையாபுரியை பிடிக்காது எனச் சொல்லியது. அதற்கான காரணமாக “ காலையில் எழு; அதைச் செய்; இதைச்செய்;” என ஒரே கரைச்சல் – அப்பா போல. அதனால் அவரைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு கோவிக்க மாட்டார் என்று சொன்னது.

பிடிக்க வில்லை என்று சொன்ன போட்டியாளர் முகத்தில் வடிந்ததென்னவோ அதிக அன்புதானே அன்றி வெறுப்பல்ல. பல அப்பாக்கள் வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளது.

பிடிக்கவில்லை என்ற சொல்லின் அடியாக பிடி உள்ளது போல் பிடிக்காத அப்பாவால் தான் வாழ்வில் பிடி உண்டாகிறது. அடி வாங்கி பின்னாடியே பலருக்கு அது பிடிபடும்…

அண்மையில் நண்பர் ஒருவர் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் தசைப்பிடிப்புக் காரணமாக வீழ்கிறான். நடக்கவே முடியா நிலையில், அவனுடைய அப்பா அவன் கை ஒன்றை தோளில் போட்டு தாங்க ஒற்றைக் காலால் கெந்திக் கெந்தி பந்தயத்தை நிறைவு செய்கிறான். கடைசி நபராக நிறைவு செய்கிறான். 

பந்தயத்தில் முதலிடம் பிடிப்பதுதான் வெற்றி அல்ல; இலக்கை அடைந்து பந்தயத்தை நிறைவு செய்வதுதான் வெற்றி என்ற வாழ்வியலை மகனுக்குக் கற்றுக் கொடுத்த அந்த தந்தையை நினைத்து மகன் கண்ணீர் சிந்தினான்.

ஆம்.. என்னதான் தந்தை கண்ணீர் சிந்த வைத்தாலும் அவரின் பின்னால் ஒரு வழியோ, தத்துவமோ, நுட்பமோ, பொறிமுறையோ ஒழிந்திருக்கும். என்ன ஒரு துர்ப்பாக்கியம் எனில் தந்தை மறைந்த பின் தான் பலருக்கு அவை தெரிகிறது..

கடனில்லாமல் தன் மக்கள் வாழ வேண்டும் என வாழும் அப்பாக்களை வாழும் போதே கண்டு கொண்டால் அவர்கள் இறந்த பின் பிதிர்க்கடன் தீர்க்க வேண்டிய தேவையே இராது.

தந்தையர் தினத்துக்காக எழுத நினைத்தது.. இப்போதான் எழுத முடிந்தது. தந்தையைப் பற்றி என்பதால் இவ்வளவு பிந்தியது போல..