சங்கீத ஜாதி முல்லை..

477

கோடை விடுமுறையில் செல்ல குளிர் விடுமுறை முடித்து வர, இரண்டும் ஒன்றை ஒன்று உரசிக் கடக்கும் அந்த நொடியில் உடலுணரும் கூதல்..

பயண நள்ளிரவை  இதமான நல்லிரவாக்கும் முனைப்பில் காதுக்குள் இசை மேடையை நுழைக்கும் என் அப்பிள் பேசி..

நேற்றும் அப்படி ஒரு அன்றாடம் தான்.. ஜீ தமிழின் ஸரிகமப சூப்பர் ஸ்டார் இசை மேடை நிகழ்வை காதில் பாய விட்டபடி பேருந்தும் பயணம்..

இரண்டாவது போட்டியாளர் பாடத் தொடங்கியதும் தென்றல் வருடத் தொடங்கியது. உடலை அல்ல.. உள்ளத்தை.

இலையுதிர்காலக் கூதலை உளம் உணர்ந்தது. மணவாட்டியின் முதல் தொடுகை, முதல் மழலையின் முதல் தொடுகை, உயிர் பிரியும் தருணத்தில் சுருக்கத் தோலால் தழுதழுக்கும் முதுமை தடவல்.. இவை எல்லாம் தராத ஒரு உணர்வு உள்ளத்தில் பிறந்து உடலெங்கும் ஓடியது.

மெய் சிலிர்த்தது.. புல்லரித்தது போன்ற சொற்றொடர்களின் அர்த்தம் அன்றுதான் அறிந்தேன்.. ஆம்.. உயிரை வருட உயிர் நிலையை உலுக்கிய அந்தப் பாடல் சங்கீத ஜாதி முல்லை.

தலையில் பாறாங்கல்லை தூக்கியபடி வானில் பறந்து பரவசம் காட்டிய சிட்டுக்குருவி போல பாடிய அந்த சின்னச் சிட்டு மொட்டு விரித்தது. அதன் உடனடி விளைவாக என் விரல்கள் யூ ட்யூப்பில் மெட்டுக் கட்ட வந்து விழுந்தது சங்கதி.

குரல், வாத்தியம், நிருத்தியம் என முழுமையான இசைக்கு மகுடமாகத் தமிழும் திகழ்ந்து உயிரை உருக்கி பாய விடும் வீரியம் மிக்க காதல் ஓவியமாக சங்கீத ஜாதி முல்லை…

உங்களுக்காகவும்…….!