உயிர் மணக்கும் முள்ளிவாய்க்கால் காலம் – நிசத்தின் தரிசனம்

அதே நேரம் இங்கே நல்ல சமாரியராய்(Good Samaritan)
வந்த உதவி மருத்துவர் திருமதி செவ்வானம் சில நாட்களின் பின் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் தியாகச் சாவடைந்தார்.

 

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை வந்த போது கையில் அகப்பட்ட பொருட்களுடன் வீட்டைவிட்டு குடும்பத்துடன் ஓடிவந்தான். உணவு கேட்டுப் பிள்ளைகள் பசியால் அழுவதை பார்த்துப் பொறுக்க முடியாமல் போக…. உலகத்துச் சாமிகளுக்கு எல்லாம் நேர்த்தி வைத்தபடி மீண்டும் கிளிநொச்சி பாரதி புரத்தில் அமைந்திருந்த தனது வீட்டில் உணவுப் பொருட்களை மீட்கப்போனான்.

சென்ற சிறிது நேரத்திலேயே அவனருகே வீழ்ந்துவெடித்த ஆட்லெறி எறிகணையில் காயமடைந்து கால் எலும்பு உடைத்து விட்டது. அறிவியல்நகர் பகுதியில் நின்ற போராளிகள் அவனை மீட்டுக் குருதி பெருக்கைக் கட்டுப்படுத்தி வைத்தியசாலைக்கு அனுப்பி இருந்தனர். மூத்த வைத்தியர் ஒருவர் அவனுக்கு External fixation செய்திருந்தார்.

இப்போது அவனுக்கு என்புகளும் பொருந்திவிட்டது. என்புகளை நிலைப்படுத்திய இரும்பு ஆணிகளை கழற்ற வேண்டிய காலத்தில் அவன் வைத்தியசாலைப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. காரணம் வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியசாலைச் சூழலிலேயே அதிகம் எறிகணை,விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ரீவி அன்ரனா போல சிக்கலாக வெளியே நீட்டிக் கொண்டிருந்த External fixation குண்டுகள் வெடிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து படுக்கவும் முடியாமல் விரைந்து நடக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் காலில் பொருத்தப்பட்ட External fixation உடன் ஒழுங்காக வெட்டப்படாத பதுங்கழியில் இறங்கும் போது பனைவேர்களின் சிலும்பலில் சிக்கிச் சிரமப்பட்டவனை செவ்வானம் மீட்டுவந்தாள். மாமரங்களின் கீழ் விரிக்கப்பட்டிருந்த தரப்பாளில் அவனைப் படுக்க வைத்துப் பரிசோதித்த வைத்தியர் அமுது வெளிப்புறத் தோலை கிருமிநீக்கிகள் கொண்டு சுத்தம் செய்துவிட்டு External fixationஐ கழற்றிவிட்டார்.

கும்பிட்டுவிட்டு எழுந்து விரைந்து சென்றவன் சிறிது நேரத்தில் தனது பாட்டியை இன்னொருவனின் உதவியுடன் தூக்கிவந்தான். இப்போது அவனின் பாட்டிக்கு எதுவுமே செய்ய வேண்டியிருக்கவில்லை. ஆம், குளிர்ந்து போயிருந்த பாட்டியின் உடல் அவர் உயிர்பிரிந்து நெடுநேரம் ஆகிவிட்டதைச் சொன்னது.

தொடரும்…

-அறத்தலைவன்-