கப்டன் இதயகீதன் – நிழலரசின் நிஜமுகங்கள்.

நாளையின் ஞான ஒளியாக இருக்க வேண்டிய வீரன் கப்டன் இதயகீதன்
நேற்று எம் தேசத்தில் விடுதலைக்காக வீழ்ந்தான்.
 
ஞானிமடம் பூநகரியில் அவதரித்த எங்கள் தோழன் கப்டன் இதயகீதன் யாழ்/மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருநதான்.
 
 
படித்துக் கொண்டிருக்கும் அக்காலத்திலேயே பொருண்மிய மேம்பட்டு நிறுவனத்துடன் சேர்ந்து பல காத்திரமான பங்களிப்பை நல்கியவன்.
 
 
“தமிழர் பகுதிகள் மீதான அரசின் பொருளாதாரத் தடை(Economic embargo)உச்சநிலையில் இருந்த போது கற்பூரம் ,கண்டோஸ் போன்ற பொருட்களுக்கு கடுமையான தடையிருந்த காலத்தில் அவரிற்கு மாற்றீடுகள் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்வான்.”
 
“சொல்லுடன் நிற்காமல் ஓர் காத்திரமான கண்டுபிடிப்பையும் செய்திருந்தான்.” யாழ் மாவட்டத்தின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் கப்டன் இதயகீதன் தொடர்பாகச் சொன்ன விடையங்கள் இவை.
 
அது மட்டுமா, Tissue Culture சம்பந்தமாக அதிகம் அதிகம் சிந்தித்தவன்.
 
எங்கள் வரண்ட வலயத்தின்   குறைந்தளவு நிலத்தில் அதிக விளைச்சல் பெறுவது சம்பந்தமாக
அதிகம் கனவு கண்டவன்.
 
நான்கே(04) வருடத்தில்  பயன்தரும் தென்னை போல குறைந்த காலத்தில் பயன்தரும் பனை இனம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வான்.
 
கரிய உருவமும் வெள்ளை உள்ளமும் கொண்ட இதயகீதன் க/பொ/த உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு தனது ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாகப் படிப்பித்துக் கொண்டும் இருந்தான்.
 
1990ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து அதன்  உச்சகட்டத்தை 91,92ஆம் ஆண்டுகளில் அடைந்த போது பாடசாலைகள் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களால் (IDPs – Internally Displaced People)
நிரம்பி வழிந்த கொண்டிருந்தது. மீதமிருந்த பாடசாலைகளில் ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிட்டிருந்தது.
 
“கல்வியே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்றிருந்தவன்.அம் முடிவை மாற்றிவிட்டு அவ்
இக்கட்டான நாட்களில் இந்த மானமாவீரன் தீர்க்கமானதோர் முடிவுக்கு வருகிறான்.
 
 
தமிழர்தம்
பழம்பெரும் மாந்தைத்துறைமுகத்தைக் கொண்டிருந்த மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்த  பயிற்சிப் பாசறையில்  தனது அடிப்படைப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டு தனது பொதுப் பணியைத் தீவிரப்படுத்தினான்.
 
போர்க் களத்தில் ஓர் ஆயுதம் தாங்கிய போராளியாகவும் சிறந்த முன் வைத்தியசாலைப் பாரமரிப்பு வழங்குபவனாக(Expert in Pre-Hospital care) இருந்தவன்.
தமிழீழ மருத்துவக் கல்லூரியின் தேர்வுப் பரீட்சையில் சித்தியடைந்தான்.
 
தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மாணவனாக இருந்த காலத்திலும் யாழிலும் வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் நடைபெற்ற சண்டைகளில் பெருவிருப்புடன் கலந்து கொள்வான்.
 
1995 ஆம் ஆண்டு,
சூரியக்கதிர் – 01 இராணுவ நடவடிக்கை மூலம் யாழ் வலிகாமம் முற்று முழுதாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்
அந்தக் கொடிய முற்றுகை நடுவே கொரில்லாத் தாக்குதல்கள்(Hit- and- run tactics)
 நடத்திக் கொண்டிருந்த தமிழர் சேனையின் சிறுத்தைப் படையணியுடன் களம் இறங்கியிருந்தான்.
 
1995ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்திலிருந்து 1996ஆம் ஆண்டு சித்திரை மாதம் வரை பல தாக்குதல்கள் நடாத்திய தரைச் சிறுத்தை அணியின் நகர்வுகள் பலவற்றில் பங்கெடுத்தான்.
 
பின் நாட்களில் வலிகாமத்தின் சுழிபுரம்  பகுதியில் 03/04/1996 ஆம் தேதி
வீரச்சாவு அடைந்தான்.
 
அவன் பதித்த பாதச்  சுவட்டில் கால் பதிக்க முடியாமல் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மைதான்.
 
          ஆனாலும்
 
01.)சாதி,
02.)சமயம்,
03.)பிரதேச வேறுபாடுகள்
 
கடந்து ஒற்றுமையாக ஞாலத்திற்கு எடுத்துக்கட்டான இனமாகவும் வாழ்வோமென உறுதியெடுப்போம்.
 
 நன்றி