காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்…

காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்…

வீரவேங்கை அன்பு
(மூத்ததம்பி தனபாலசிங்கம்)
வீரச்சாவு 16/04/1985
வீரப்பிறப்பு 20/05/1960




நல்லூர் என்றால் தியாகி திலீபன் நினைவில் வருவது போல,



மாமாங்கம் என்றால் அன்னை பூபதி நினைவில் வருவது போல,



அடம்பன் என்றால் பெருவீரன் லெப்.கேணல் விக்டர் நினைவில் வருவது போல,



நெல்லியடி என்றால் கரும்புலி கப்டன் மில்லர் நினைவில் வருவது போல,



வடமராட்சி கிழக்கு என்றால் முதலில் ஓடி வந்து நிற்பது அன்பு அண்ணரின் தியாக(வீர)வரலாறுதான்!



மானிப்பாய் பகுதியில் தனது சக போராளிகளை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த வீரவேங்கை அன்பு அவர்களும் செம்மொழி பேசும் எம்மினத்தில் தியாகத்தின் எல்லைகளை மாற்றி அமைத்தவர்.



16/04/1985 அன்று தனது உயிரைக்கொடுத்து அன்றைய யாழ்மாவட்ட தளபதியான கேணல்.கிட்டுவை காத்தருளியவர்தான் இந்த அன்பு.



கைக்குண்டு ஒன்றின் பாதுகாப்பு நெம்புகோல் தவறுதலா கழன்று அடுத்த கணம் வெடிக்கும் நிலையை அடைந்தது.


இந்த இக்கட்டான நிலையில் அதை தூர வீசவும் முடியாத சூழ்நிலையில் எல்லோருமே ஆபத்தில் சிக்கிய கணப்பொழுதில் மின்னலெனச் செயற்பட்டார் வீரவேங்கை அன்பு.



ஆம்,அக்குண்டின் மேல் தானேபடுத்து, குண்டுச் சிதறல்களைத் தானே வாங்கி,தன்னைத் தானே சிதைத்து, தன் இனிய தோழர்களைக் காத்தருளி தியாக வேள்வியின் ஆரம்பகாலங்களில் ஆகுதியானார்.



முன்னாள் கனரக ஆயுத பயிற்சியாளரான வீரவேங்கை அன்பு தமிழர்தம் நவீன வீரவரலாற்றில் தனக்கென ஓர் தனியிடம் பெற்ற ஓர் பெரும் வீரன்.



அன்பு அண்ணாவின் தியாகத்துக்கு பின்னர் இவரது குடும்பத்தில் பலர் தம்மை போராளியாக்கி தாய்நிலத்தின் பல பாகங்களில் உலா வந்தார்கள்.

அவர்களில் கப்டன் அன்பானந்தன் முதன்மையானவன். 



அவர்களுடன் பழகுவதற்கு அடியேனுக்கு வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.



வடமராட்சி கிழக்கின் முதலாவது போராளியாகிய வீரவேங்கை அன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது பயிற்சி அணியில் பயிற்சிபெற்றவர்.



சோழர்கள்(செம்பியர்கள்) தரையிறங்கிய வடமராட்சி கிழக்கிலிருந்து அதிகளவான போராளிகளை 1983ஆம்,1984ஆம்,1985ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைத்த வீரன் வீரவேங்கை அன்பு ஆவார்!



வடமராட்சிகிழக்கின் முதலாவது மாவீரரும் இவரேதான்! 

முப்படை கண்ட தமிழர் சேனையின் போராட்டவரலற்றில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்த இவ் வீரனை #தியாகசீலன்_அன்பு என தமிழர்தம் வரலாறு பெருமையுடன் பதிவு செய்துள்ளது!

இப்பெரும் தியாகியை என்றென்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்!